Translate

Sunday, February 6, 2011

வீழ்ந்தது மரம் ! சாய்ந்தது மனம் !.



வீழ்ந்தது மரம் ! சாய்ந்தது மனம் !.


ஓங்கி வளர்ந்த தோர் அரசமரம்
அதன் அடிதனில் அருள் தரும்
லிங்கேஸ்வரர்!
காலை எழுந்தவுடன் காட்சி தருவார்!
மனக்கவலைஎல்லாம் போக்கி
தினம் மகிழ்ச்சி தருவார்!


அரசமரம் அருகினிலே ஓர் புளிய மரம்
அதன் உச்சாணிக் கிளையினிலே
வானரக் கூட்டம் !காலைதோறும்
போடுகின்ற சதிராட்டம் கண்டு,
ஓடுமடா மனவாட்டம்!

மாலைதோறும் பறந்து வந்து தங்குகின்ற
பறவைக் கூட்டம் ,கண்டு கவலையெல்லாம்
ஓடிவிடும் ! களிப்பதுதான் பொங்கிவரும்
அந்திமாலை கதிரவன் மறைவு கண்டு!
இதயம் எதிர் நோக்கும் இனிக்கும் இரவுதனை!

இறைவன் படைத்திட்ட அந்த மரம்!
அந்த இறைவனுக்கே நிழல் தந்த புளியமரம்!
மண்மீது சாய்ந்ததுவே மனம்கெட்ட மனிதர்களால்
சூளையில் வெந்து கறியாகிப் போனதுவே!
வீழ்ந்தது மரம்! சாய்ந்தது எந்தன் மனம்!


By,

D.SANTHANAM,




Thursday, February 3, 2011



அபயம் வேண்டுதல்
முறையீடு
திருச்சிற்றம்பலம்


உருவாய் அருவாய் ஒளியாய் வெளியாய்
உலவா ஒருபே ரருளா ரமுதம்
தருவாய் இதுவே தருணம் தருணம்
தரியேன் சிறிதுந் தரியேன் இனிநீ
வருவாய் அலையேல் உயிர்வாழ் கலன் நான்
மதிசேர் முடிஎன் பதியே அடியேன்
குருவாய் முனமே மனமே இடமாக்குடி
கொண் டவனே அபயம் அபயம். 1

என்னே செய்வேன் செய்வகை ஒன்றிங்
கிதுஎன் றருள்வாய் இதுவே தருணம்
மன்னே அயனும் திருமா லவனும்
மதித்தற் கரிய பெரிய பொருளே
அன்னே அப்பா ஐயா அரசே
அன்பே அறிவே அமுதே அழியாப்
பொன்னே மணியே பொருளே அருளே
பொதுவாழ் புனிதா அபயம் அபயம். 2

கருணா நிதியே அபயம் அபயம்
கனகா கரனே அபயம் அபயம்
அருணா டகனே அபயம் அபயம்
அழகா அமலா அபயம் அபயம்
தருணா தவனே அபயம் அபயம்
தனிநா யகனே அபயம் அபயம்
தெருணா டுறுவாய் அபயம் அபயம்
திருவம் பலவா அபயம் அபயம். 3

மருளும் துயரும் தவிரும் படி என்
மனமன் றிடை நீ வருவாய் அபயம்
இருளும் பவமும் பெறுவஞ் சக நெஞ்
சினன் என் றிகழேல் அபயம் அபயம்
வெருளும் கொடுவெம் புலையும் கொலையும்
விடுமா றருள்வாய் அபயம் அபயம்
அருளும் பொருளும் தெருளும் தருவாய்
அபயம் அபயம் அபயம் அபயம். 4

இனி ஒர் இறையும் தரியேன் அபயம்
இது நின் அருளே அறியும் அபயம்
கனியேன் என நீ நினையேல் அபயம்
கனியே கருணைக் கடலே அபயம்
தனியேன் துணைவே றறியேன் அபயம்
தகுமோ தகுமோ தலைவா அபயம்
துனியே அறவந் தருள்வாய் அபயம்
சுக நாடகனே அபயம் அபயம். 5

அடியார் இதயாம் புயனே அபயம்
அரசே அமுதே அபயம் அபயம்
முடியா தினி நான் தரியேன் அபயம்
முறையோ முறையோ முதல்வா அபயம்
கடியேன் அலன் நான் அபயம் அபயம்
கருணா கரனே அபயம் அபயம்
தடியேல் அருள்வாய் அபயம் அபயம்
தருணா தவனே அபயம் அபயம் 6

மலவா தனைதீர் கலவா அபயம்
வலவா திருஅம் பலவா அபயம்
உலவா நெறி நீ சொலவா அபயம்
உறைவாய் உயிர்வாய் இறைவா அபயம்
பலஆ குலம் நான் தரியேன் அபயம்
பலவா பகவா பனவா அபயம்
நலவா அடியேன் அலவா அபயம்
நட நாயகனே அபயம் அபயம். 7

கொடியேன் பிழை நீ குரியேல் அபயம்
கொலைதீர் நெறிஎன் குருவே அபயம்
முடியேன் பிறவேன் என நின் அடியே
முயல்வேன் செயல்வேறறியேன் அபயம்
படியே அறியும் படியே வருவாய்
பதியே கதியே பரமே அபயம்
அடியேன் இனிஒர் இறையும் தரியேன்
அரசே அருள்வாய் அபயம் அபயம். 8

இடர்தீர் நெறியே அருள்வாய் அபயம்
இனி நான் தரியேன் தரியேன் அபயம்
வி டர்போல் எனை நீ நினையேல் அபயம்
விடுவேன் அலன் நான் அபயம் அபயம்
உடலோடு டுறுமாபொருள் ஆ வியுமிங்
குனவே எனவே அலவே அபயம்
சுடர்மா மணியே அபயம் அபயம்
சுகநா டகனே அபயம் அபயம். 9

குற்றம் பல ஆயினும் நீ குறியேல்
குணமே கொளும் என் குருவே அபயம்
பற்றம் பலமே அலதோர் நெறியும்
பதியே அறியேன் அடியேன் அபயம்
சுற்றம் பலவும் உனவே எனவே
துணைவே றிலை நின் துணையே அபயம்
சிற்றம் பலவா அருள்வாய் இனிநான்
சிறிதுந் தரியேன் தரியேன் அபயம். 10
திருச்சிற்றம்பலம்






Friday, January 21, 2011

ஜோதி ஜோதி ஜோதி


ஜோதி ஜோதி ஜோதி சுயம்
ஜோதி ஜோதி ஜோதி பரம்
ஜோதி ஜோதி ஜோதி அருள்
ஜோதி ஜோதி ஜோதி சிவம்

வாம ஜோதி சோமஜோதி வானஜோதி ஞானஜோதி
மாகஜோதி யோகஜோதி வாதஜோதி நாதஜோதி
ஏமஜோதி வியோமஜோதி யேறுஜோதி வீ றுஜோதி
ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி.

ஆதிநீதி வேதனே ஆடல் நீடு பாதனே
வாதிஞான போதனே வாழ்கவாழ்க நாதனே.

திருச்சிற்றம்பலம்
*******************

திருஅருட்பா


திருஅருட்பா

ஆடிய பாதம்


ஆடிய பாதமன் றாடிய பாதம்
ஆடிய பாதம் நின் றாடியபாதம்


பாடிய வேதங்கள் தேடிய பாதம்
பத்திசெய் பத்தர்க்குத் தித்திக்கும் பாதம்
நாடிய மாதவர் நேடிய பாதம்
நாதாந்த நாட்டுக்கு நாயக பாதம். ஆடிய.....1

தீராத வல்வினை தீர்க்கின்ற பாதம்
தெய்வங்கள் எல்லாந் தெரிசிக்கும் பாதம்
வாரா வரவாகி வந்தபொற் பாதம்
வஞ்ச மனத்தில் வசியாத பாதம். ஆடிய.....2

ஆரா அமுதாகி அண்ணிக்கும் பாதம்
அன்பர் உளத்தே அமர்ந்தருள் பாதம்
நாரா யணன்விழி நண்ணிய பாதம்
நான்புனை பாடல் நயந்தபொற் பாதம் ஆடிய...3

நல்லவர் எல்லாம் நயக்கின்ற பாதம்
நாத முடிவில் நடிக்கின்ற பாதம்
வல்லவர் சொல்லெல்லாம் வல்லபொற் பாதம்
மந்திர யந்திர தந்திர பாதம் ஆடிய.....4

எச்சம யத்தும் இலங்கிய பாதம்
எள்ளுக்குள் எண்ணெய்போல் எங்குமாம் பாதம்
அச்சம் தவிர்த்தென்னை ஆட்கொண்ட பாதம்
ஆனந்த நாட்டுக் கதிபதி பாதம். ஆடிய......5

தேவர்கள் எல்லோரும் சிந்திக்கும் பாதம்
தெள்ளமு தாய் உளந் தித்திக்கும் பாதம்
மூவரும் காணா முழுமுதற் பாதம்
முப்பாழுக் கப்பால் முளைத்தபொற் பாதம். ஆடிய.....6

துரிய வெளிக்கே உரியபொற் பாதம்
சுகமய மாகிய சுந்தரப் பாதம்
பெரிய பொருளென்று பேசும்பொற் பாதம்
பேறெல்லாந் தந்த பெரும்புகழ்ப் பாதம். ஆடிய......7

சாகா வரந்தந்த தாரகப் பாதம்
சச்சிதானந்த சதோதய பாதம்
தேகாதி எல்லாம் சிருட்டிக்கும் பாதம்
திதிமுதல் ஐந்தொழில் செய்கின்ற பாதம். ஆடிய......8

ஓங்கார பீடத்தொளிர்கின்ற பாதம்
ஒன்றாய் இரண்டாகி ஓங்கிய பாதம்
தூங்காத தூக்கத்தில் தூக்கிய பாதம்
துரியத்தில் ஊன்றித் துலுங்கிய பாதம். ஆடிய.......9

ஐவண்ண மும்கொண்ட அற்புதப் பாதம்
அபயர் எல்லார்க்கும் அமுதான பாதம்
கைவண்ண நெல்லிக் கனியாகும் பாதம்
கண்ணும் கருத்தும் கலந்தபொற் பாதம். ஆடிய......10

ஆருயிர்க் காதாரம் ஆகிய பாதம்
அண்ட பிண்டங்கள் அளிக்கின்ற பாதம்
சாருயிர்க் கின்பம் தருகின்ற பாதம்
சத்திய ஞான தயாநிதி பாதம். ஆடிய........11

தாங்கி எனைப் பெற்ற தாயாகும் பாதம்
தந்தையுமாகித் தயவுசெய் பாதம்
ஓங்கிஎன் னுள்ளே உறைகின்ற பாதம்
உண்மை விளங்க உரைத்தபொற் பாதம். ஆடிய.......12

எண்ணிய வாறே எனக்கருள் பாதம்
இறவா நிலையில் இருத்திய பாதம்
புண்ணியர் கையுள் பொருளாகும் பாதம்
பொய்யர் உளத்தில் பொருந்தாத பாதம். ஆடிய.......13

ஆறந்தத் துள்ளும் அமர்ந்தபொற் பாதம்
ஆதி அனாதியும் ஆகிய பாதம்
மாறந்தம் இல்லாஎன் வாழ்முதற் பாதம்
மண்முதல் ஐந்தாய் வழங்கிய பாதம். ஆடிய.......14

அருட்பெருஞ் ஜோதிய தாகிய பாதம்
அம்மையும் அப்பனும் ஆகிய பாதம்
பொருட்பெரும் போகம் புணர்த்திய பாதம்
பொன்வன்ண மாகிய புண்ணிய பாதம் ஆடிய.......15

நாரண னாதியர் நாடரும் பாதம்
நாந்தவத் தாற்பெற்ற நற்றுணைப் பாதம்
ஆரணம் ஆகமம் போற்றிய பாதம்
ஆசைவிட் டார்க்கே அணிமையாம் பாதம்.

ஆடிய பாதமன் றாடிய பாதம்
ஆடிய பாதம் நின்றாடிய பாதம் 16

திருச்சிற்றம்பலம்





.

Tuesday, January 18, 2011

திருஅருட்பா


திருஅருட்பிரகாச வள்ளலார் என்று சிறப்புப்பெயர் பெற்ற இராமலிங்கம் பிள்ளை

அருளிய "திரு அருட்பா" ஒரு தெய்வீக நூலாகும்.இந் நூல் ஆறு

திருமுறைகளாகப் பகுக்கப்பெற்றுள்ளது. சில பாடல்கள் மட்டும் இங்கு

தந்திருக்கின்றேன்.


திருவடிப் புகழ்ச்சி
காப்பு

இன்றுவருமோ நாளைக் கேவருமோ அல்லதுமற்

றென்றுவருமோஅறியேன் எங்கோவே-துன்றுமல

வெம்மாயை அற்று வெளிக்குள் வெளிகடந்து

சும்மா இருக்கும் சுகம். (முதல் திருமுறை)

Sunday, January 16, 2011

சன்மார்க்க நெறிகள்



சன்மார்க்க நெறிகள்


கடவுள் ஒருவரே. அவரேஅருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.

தெய்வங்கள் பெயரால் உயிர்ப்பலி செய்யாதிருத்தல் வேண்டும்.

பசி தவிர்த்தலாகிய ஜீவகாருண்ய ஒழுக்கமே மோட்ச வீட்டின்
திறவுகோல்.

உலக அமைதிக்கு ஆன்மநேய ஒருமைப்பாட்டைக் கடைபிடிக்க
வேண்டும்.

மது, மாமிசம் உண்ணாதிருத்தல் வேண்டும்.

சாதி, இனம், சமயம் முதலிய வேறுபாடுகளின்றி
இருத்தல் வேண்டும்.

எவ்வுயிரையும் தம்முயிர்போல் எண்ணி நடக்க வேண்டும்.

எக்காரியத்திலும் பொது நோக்கம் வேண்டும்.

இறந்தவர்களை எரிக்காது புதைத்தல் வேண்டும்.

ஜீவகாருண்ய ஒழுக்கமே கடவுள் வழிபாடு.